முதல்வர் பேச்சை கேட்காத அதிகாரிகள் எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி
முதல்வர் பேச்சை கேட்காத அதிகாரிகள் எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி
ADDED : ஜூன் 16, 2024 07:36 AM

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையாவின் பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை,'' என, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், வாக்குறுதித் திட்டங்கள் என்ற பெயரில், வளர்ச்சிப் பணிகள் செய்யாமல் உள்ளனர். பல தொகுதிகளில் குடிநீர் பிரச்னை உள்ளது.
முதல்வரின் தொகுதியான வருணாவில் கூட, அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. துமகூரில் அசுத்த தண்ணீர் குடித்தவர்கள் உயிரிழந்ததற்கு அரசே நேரடி பொறுப்பு. அம்மாவட்ட கலெக்டரிடம் நான் பேசினேன். இறந்தவர்களுக்கு உடல் நல குறைபாடு இருந்ததாக கூறுகிறார்.
அரசே பொறுப்பு
கொப்பாலிலும் அசுத்த தண்ணீர் குடித்து மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே காரணம். இந்த அரசால் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்க முடியாது. தண்ணீர் கொடுக்க காங்கிரஸ் அரசுக்கு தகுதி இல்லை. முதல்வர் சித்தராமையாவுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை.
முதல்வர் வார்த்தைகளுக்கு, அதிகாரிகள் மதிப்பளிப்பது இல்லை. அவரது பேச்சை யாரும் பெரிதுபடுத்துவதும் இல்லை. யார் முதல்வர் என்று தெரியவில்லை. முதல்வர் பதவிக்காக, இருவர் இடையே போராட்டம் நடக்கிறது.
மேலிடத்திற்கு பணம்
டேங்கர் மாபியா மூலம் பணம் சம்பாதித்து, கட்சி மேலிடத்திற்கு பணம் அனுப்புகின்றனர். அதிகாரிகள் கைக்கட்டிக்கொண்டு அனைத்தையும் வேடிக்கை பார்க்கின்றனர். எடியூரப்பாவுக்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்கின்றனர்.
இவ்விஷயத்தில் அரசுக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்தான் இப்படி வெறுப்பு அரசியல் இருந்தது. இப்போது கர்நாடகாவிலும் பரவிவிட்டது. எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார். ஆனால் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், விசாரணைக்கு ஆஜராக எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர்.
எங்கள் ஆட்சியில் 40 சதவீத கமிஷன் நடந்தது என, காங்கிரஸ் கட்சியினர் பொய்யாக குற்றஞ்சாட்டினர். இதனால் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம்.
முதல்வர் பதவிக்கு 2,500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., எத்னால் கூறியிருந்தால், விசாரணை ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.