ADDED : ஜூன் 03, 2024 11:34 PM

புதுடில்லி, :டில்லி மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கைதான, பாரத் ராஷ்ட்ர சமிதி எம்.எல்.சி., கவிதா மீது, அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
டில்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளும், மாநில எம்.எல்.சி.,யுமான கவிதாவை, மார்ச் 15ல் அமலாக்க துறையினர் கைது செய்தனர்.
தற்போது அவர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கவிதா மீது அமலாக்க துறையினர் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், 'கவிதாவிடம் இருந்து எட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த ஆதாரங்களை அவர் அழித்துள்ளார். இது, நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அறை எடுத்து, அவர் டீலிங் பேசி உள்ளார். இதற்கான ஆதாரங்களும் உள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.