ADDED : ஆக 07, 2024 05:56 AM

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 14 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் பதவி மீது, துணை முதல்வர் சிவகுமார், 'கண்' வைத்துள்ளார்.
ஆட்சி அமைந்த போது, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று காங்., மேலிடம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த வகையில் கணக்கு பார்த்தால், இன்னும் 16 மாதங்கள் உள்ளன. ஆனால், சில மாதங்களாகவே, சித்தராமையா தான் ஐந்து ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
துணை முதல்வரும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், நைசாக காய் நகர்த்தி வருகிறார். ஆனால், இருவரிடையே ஒன்றுமே நடக்கவில்லை என்பது போன்று வெளியில் காண்பித்து கொள்கின்றனர்.
தற்போது, 'மூடா' முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் மீது எப்போது வேண்டுமானாலும், விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி, சிவகுமாரிடம், அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதேவேளையில், எஸ்.சி., சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அந்த வகையில், ஏற்கனவே பரமேஸ்வர் துணை முதல்வர் பதவியில் இருந்துள்ளார். தற்போது அமைச்சராக இருக்கும் அவர், உள்துறை என்ற மிக பெரிய பொறுப்பையும் வகித்து வருகிறார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே, கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.
இவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம் என்று தேசிய தலைவர்களும், சிவகுமாரும் யோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், எஸ்.சி., சமுதாயத்துக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து உள்ளதாக கூறி, மக்களிடையே ஆதரவு திரட்டவும் முடியும். கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் அரசியல் பரபரப்பு, சற்று ஓய்ந்த பின்னர், பிரியங்க் கார்கே, துணை முதல்வராவது உறுதி என்றே சித்தராமையா ஆதரவாளர்கள் பேசி கொள்கின்றனர்.
ஒரு வேளை அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால், மூத்த தலைவர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, ராமலிங்கரெட்டி, மல்லிகார்ஜுன் உட்பட சிலர், தங்களுக்கும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று அடம் பிடிப்பது உறுதி. இதை காங்கிரஸ் மேலிடம் எப்படி சமாளிக்கும் என்பது தான் கேள்விக்குறி.
எப்படியும் தசரா வேளையில், கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, துணை முதல்வர் பதவி குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படலாம்.
- நமது நிருபர் -