சித்துவுக்கு காங்., மேலிடம் முழு ஆதரவு; 'ராசியில்லாத ராஜா'வான சிவகுமார்
சித்துவுக்கு காங்., மேலிடம் முழு ஆதரவு; 'ராசியில்லாத ராஜா'வான சிவகுமார்
UPDATED : ஆக 07, 2024 06:10 AM
ADDED : ஆக 07, 2024 05:58 AM

கர்நாடகாவில், கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பின், ஒரு வழியாக ராகுலின் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார். சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.
முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுக்கு அவ்வப்போது எதிர்ப்பு உருவானது. இரு தலைவர்களும், தங்கள் ஆதரவாளர்களை உசுப்பேத்தி விட்டனர். அவ்வப்போது காங்கிரசின் அரசியல் பரபரப்பாக காணப்பட்டது.
தலைவலி
லோக்சபா தேர்தலை வைத்து மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமார் போட்ட கணக்கு தப்பானது. இது, முதல்வர் சித்தராமையாவுக்கு வசதியாக போய் விட்டது. ஆனால், வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல், 'மூடா' முறைகேடு, அவருக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது.
அவர் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை துவங்கி உள்ளன. மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை சிவகுமார் தான் பா.ஜ.,விடம் கொடுத்தார் என்று மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, 'குண்டு' போட்டார்.
இந்த குற்றச்சாட்டை சிவகுமார் மறுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல், மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவை கட்சி மேலிடம் கண்டிக்கும்.
தேவைப்பட்டால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மேலிடம் விலக சொல்லும் என்று சிவகுமார் நினைத்திருந்தார்.
தயாராக இல்லை
ஆனால், சித்தராமையாவுக்கு, கட்சி மேலிடத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டில்லி சென்ற அவர் மேலிட தலைவர்களை சந்தித்து, 'என் மீது எந்த தவறும் இல்லை. ஆனாலும், என்னை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது' என்று கதறாத குறையாக கூறி உள்ளார்.
அப்போது மேலிட தலைவர்களோ, 'எதற்கும் கவலைப்பட வேண்டாம். சட்டப்படி போராடுவோம்' என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடகா வந்த, காங்கிரஸ் தேசிய பொது செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர், சரியாக வேலை செய்யாத அமைச்சர்களை எச்சரித்ததுடன், மூடா முறைகேட்டில் முதல்வர் மீது எந்த தவறும் இல்லை. அவருக்கு நீங்கள் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இதன் மூலம் சித்தராமையாவை, முதல்வர் பதவியில் இருந்து இறக்க மேலிடம் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள சிவகுமார் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
--- நமது நிருபர் - -