பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
ADDED : மார் 12, 2025 08:14 PM
புதுடில்லி:ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய பள்ளிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் கல்வி இயக்குனரகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உணவு மற்றும் பானங்கள் வழங்க பயன்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். அதைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறை பிப்., 28ல், அனுப்பியுள்ள உத்தரவில், 'மக்கும் தன்மையற்ற இந்த பிளாஸ்டிக் பொருட்கள் உரம் மற்றும் இயற்கை சிதைவைத் தடுக்கிறது. துர்நாற்றம் ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்குகிறது' என கூறியுள்ளது.
கேரி பேக், பேக்கேஜிங் பிலிம், ஸ்ட்ரா மற்றும் பிளாஸ்டிக் கோப்பை உட்பட பல பொருட்கள் எடை குறைந்தவை. இவை எளிதில் காற்றில் பல இடங்களுக்குப் போகும். இவை மற்ற திடக்கழிவுகளுடன் கலக்கும் அபாயமும் உள்ளது. பெரும்பாலும் நீர்நிலைகளில் தேங்கி விடுகின்றன. இதனால், வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
மேலும்,சாலைகளில் திரியும் கால்நடைகள், குப்பையில் உணவு தேடும் போது, பிளாஸ்டிக் பைகளையும் சாப்பிட்டு விடுகின்றன. இதனால் அவை உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நிலப்பரப்பில் அப்புறப்படுத்தப்படும் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவதற்கு ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகலாம். இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படுத்துகின்றன.
ஐஸ் கிரீம் குச்சி, ஸ்வீட் பாக்ஸ், பிளாஸ்டிக் கொடி, சாக்லேட் குச்சி, ஸ்ட்ரா, பிளாஸ்டிக் ஸ்பூன் உட்பட 19 ஒற்றை உபயோக பிளாஸ்டிக் பொருட்களை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
எனவே, பள்ளிகளில் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கண்காணித்து அவற்றைப் படிப்படியாக குறைத்து முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.