காதலிக்கு தீ வைத்தவருக்கு கை,கால்களில் எலும்பு முறிவு
காதலிக்கு தீ வைத்தவருக்கு கை,கால்களில் எலும்பு முறிவு
ADDED : மார் 12, 2025 08:14 PM
மதுரா:இரண்டு குழந்தைகளின் தாய், தன்னுடன் வர மறுத்ததால் தீ வைத்தவர், தப்பிக்க முயன்ற போது கை,கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஹசன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ்,28. இவர், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கோஹ் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்த ரேகா,30, என்ற பெண்ணுடன் நட்புடன் பழகினார். ரேகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறிய ரேகா, உமேஷுடன் சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுரில் தங்கியிருந்த உமேஷ் மற்றும் ரேகாவை கடந்த பிப்., 10ம் தேதி கண்டுபிடித்தனர்.
போலீஸ் மற்றும் பெற்றோர் அறிவுரையை ஏற்று, ரேகா மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் ரேகா வீட்டில் தனியாக இருந்தார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். அவரது கணவரும் வேலைக்குச் சென்றிருந்தார்.
அப்போது பெண் வேடமிட்டு வந்த உமேஷ், ரேகா வீட்டு மாடி வழியாக வந்து வீட்டுக்குள் நுழைந்தார். ரேகாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தார். ஆனால், ரேகா மறுத்தார்.
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த உமேஷ், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ரேகா மீது ஊற்றி தீ வைத்தார். மாடியில் ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால், ரேகாவில் அலறல் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டனர்.
கூட்டத்தைப் பார்த்து மிரண்ட உமேஷ், மாடியில் இருந்து குதித்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், உமேஷ் மற்றும் ரேகா ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எழுபது சதவீத தீக்காயம் அடைந்துள்ள ரேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் யாரும் புகார் தரவில்லை என்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை என போலீசார் கூறினர்.