குமாரசாமி அனுமதி அளித்த சுரங்க தொழில்: கர்நாடக வன துறை அமைச்சர் முட்டுக்கட்டை
குமாரசாமி அனுமதி அளித்த சுரங்க தொழில்: கர்நாடக வன துறை அமைச்சர் முட்டுக்கட்டை
ADDED : ஜூன் 23, 2024 04:41 PM

பெங்களூரு: சுரங்க தொழில் தொடர்பாக மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் முடிவுக்கு, கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
பல்லாரி, சன்டூரின் தேவதாரி மலைப்பகுதியில் சுரங்கதொழில் துவங்க, கே.ஐ.ஓ.சி.எல்., நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இதற்கு அனுமதி அளித்து, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி கையெழுத்திட்டார்.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின், குமாரசாமி கையெழுத்திட்ட முதல் கோப்பு இதுதான். குறிப்பாக கர்நாடகா சம்பந்தப்பட்டதாகும். திட்டத்துக்கு மாநில வனத்துறை ஒப்புதல் அளித்த பின், தொழில் துவங்கும். ஆனால் கர்நாடக அரசு, சுரங்க தொழில் நடத்த, அனுமதி மறுத்துள்ளது. குமாரசாமியின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
பல்லாரி, சன்டூரின், தேவதாரியில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. கோடிக்கணக்கான மரங்கள் உள்ளன. இங்கு சுரங்க தொழிலுக்கு அனுமதி அளிக்க கூடாது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பல தரப்பில் இருந்தும், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுரங்க தொழில் நடத்த, அடையாளம் காணப்பட்ட நிலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு சுரங்க தொழில் நடத்த அனுமதி அளித்தால், 99,330 மரங்கள் அழியும். அடர்ந்த வனம் அழிந்தால், மண்ணின் வளம் குறையும். இந்த வனப்பகுதியில் புதிதாக சுரங்க தொழில் துவங்க, அனுமதி அளிக்க வேண்டாம் என, 2016 மார்ச் 28ல், வனத்துறை முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சுரங்க தொழில் நடத்த அனுமதி கோரும் நிறுவனம், பல குளறுபடிகளை செய்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வன விதிமுறைகளை மீறியுள்ளது. எனவே நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில காங்., அரசு மீது விஜயேந்திரா பாய்ச்சல்
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மைசூரில் அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்காததால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மாநில அரசு, மக்களை பழிவாங்கும் அரசியல் செய்கிறது. வாக்குறுதி திட்டங்கள் கொண்டு வந்தும், காங்கிரசை மக்கள் கைவிட்டனர். இது அக்கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களை பழிவாங்கும் அரசியல் செய்வதை மாநில அரசு நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். பல்லாரி மாவட்டம் சண்டூரில் டியோதரி இரும்பு தாது சுரங்கத்தை துவக்குவதற்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்தும், மாநில அரசு அனுமதி அளிக்காதது கண்டனத்துக்குரியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்த பின், ஒரு தொழில் கூட வரவில்லை. மத்திய அரசு வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளை அமைக்க நினைக்கும் போது, காங்கிரஸ் எதிர்க்கிறது. அனைத்தையும் அரசியலாக்கினால், மாநிலத்தில் எப்படி வளர்ச்சி நடக்கும்.
சென்னபட்டணா இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, வரும் 25ம் தேதி புதுடில்லி சென்று, மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். இத்தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் முடிவாகவில்லை. இரு கட்சி தலைவர்களும் ஒன்றாக விவாதித்து முடிவெடுப்பர்.
காங்கிரசில் இருந்து யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். அது அவரவர் விருப்பம். மக்கள் முடிவு செய்தால், என்ன முடிவுகள் வரும் என்பதற்கு பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகளே சாட்சி. எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், மக்களின் முடிவே இறுதியானது.
இவ்வாறு அவர் கூறினார்.