l நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்த பப், பார்கள் மீது... l போலீசார் தொல்லை தருவதாக உரிமையாளர்கள் புலம்பல்
l நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்த பப், பார்கள் மீது... l போலீசார் தொல்லை தருவதாக உரிமையாளர்கள் புலம்பல்
ADDED : ஜூலை 22, 2024 06:29 AM

பெங்களூரு: பெங்களூரில் நள்ளிரவை தாண்டியும் திறந்திருந்த பப், பார்களில் போலீசார் சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயினும், தங்களுக்கு தேவையின்றி போலீசார் தொந்தரவு கொடுப்பதாக, பப், பார் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
மாநிலத்தில் பப், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்கள், நள்ளிரவு 1:00 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உள்ளது. ஆனால் பெங்களூரில் பெரும்பாலான பப்கள், பார்களை அரசு நிர்ணயித்த நேரத்தை விட, அதிகமான நேரம் திறந்து வைத்துள்ளனர். அதிகாலை விடிய விடிய பார்ட்டி நடத்துகின்றனர். அரசியல்வாதிகளின் பிள்ளைகள், முக்கிய புள்ளிகள் பார்ட்டி நடத்தி, போலீசாரிடம் சிக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.
தினமும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, கண்காணிக்கின்றனர். அப்போது பார்கள், பப்கள் திறந்திருந்தால் மூட வைக்கின்றனர். நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கின்றனர். அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால், போலீசாரின் எச்சரிக்கையை, பார், பப் உரிமையாளர்கள் பொருட்படுத்துவது இல்லை. அதிகாலை வரை வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் வினியோகிக்கின்றனர். இதன் விளைவாக மதுபானம் அருந்தி, வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குற்ற சம்பவங்களுக்கும் காரணமாகிறது.
பெங்களூரின், மத்திய மண்டல பகுதிகளில், பப், பார்கள் நள்ளிரவை தாண்டி திறந்திருப்பதாக, ரோந்து போலீசாருக்கு தகவல் வந்தது. எனவே மத்திய மண்டல போலீஸ் டி.சி.பி., சேகர் தலைமையிலான அதிகாரிகள், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் அதிரடி சோதனை நடத்தினர். நகரின் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் ஸ்ட்ரீட் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 15 பப்கள், பார்களில் சோதனை நடந்தது.
சோதனை நடந்த போது, வாடிக்கையாளர்கள் இருந்தனர். சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்ததால், போலீசார் எச்சரித்து வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி, பப்களை மூட வைத்தனர். இவற்றின் உரிமையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்தனர்.
ஜூலை 6ம் தேதியும், போலீசார் இதேபோன்று சோதனை நடத்தினர். அரசு நிர்ணயித்த விதிமுறைகளை அலட்சியப்படுத்தி, நள்ளிரவை தாண்டி பார்ட்டி நடத்த அனுமதி அளித்த பார், பப்கள் மீது, கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப்பும் ஒன்றாகும்.
போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி, பார், பப்களை மூடுவதால் உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். போலீசாரும், கலால் துறை அதிகாரிகளும் தேவையின்றி தங்களுக்கு தொல்லை கொடுப்பதாக புலம்புகின்றனர்.
இது தொடர்பாக, கலால் துறை அமைச்சர் திம்மாபுராவுக்கு, பார் அண்ட் ரெஸ்டாரெண்ட்களின் உரிமையாளர்கள் சங்கம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் கலால் வரி செலுத்துகிறோம். இதை தவிர ஆண்டு தோறும், லைசென்சை புதுப்பிக்க, ஒன்பது முதல் 10 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்துகிறோம்.
அனைத்தையும் விட முக்கியமாக, பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளோம். ஆனால் எங்கள் தொழிலுக்கு, பல இடையூறுகள் ஏற்படுகின்றன. கலால் துறை அதிகாரிகள், போலீசார் சோதனை என்ற பெயரில், எங்களுக்கு தேவையின்றி தொல்லை கொடுக்கின்றனர்.
'ஆன்லைன்' வழியாக லைசென்ஸ் கட்டணம் செலுத்த முடிவதில்லை. எங்களை போன்ற தொழில் செய்வோருக்கு, கலால் துறையின் ஒத்துழைப்பு அவசியம். பெங்களூரை போன்ற மாநகரில், அதிகாலை 2:00 மணிவரை பப், பார், ரெஸ்டாரெண்ட்கள் திறந்திருக்க, அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***