தோசைக்கு பதில் ரூ.50,000 பார்சல் கட்டி தந்த ஹோட்டல்
தோசைக்கு பதில் ரூ.50,000 பார்சல் கட்டி தந்த ஹோட்டல்
ADDED : ஜூலை 22, 2024 06:28 AM

கொப்பால்: வாடிக்கையாளருக்கு தோசைக்கு பதிலாக, ஹோட்டல் உரிமையாளர் 50,000 ரூபாயை, பார்சல் கட்டி கொடுத்தார்.
கொப்பால், குஷ்டகியில் வசிக்கும் ரசூல் சாப் சவுதாகர் என்பவர், சிறிய ஹோட்டல் வைத்து, வாழ்க்கை நடத்துகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில், வங்கியில் கட்டுவதற்காக 59,625 ரூபாயை, வீட்டில் இருந்து கொண்டு வந்தார். பணம் இருந்த கவரை, உணவு பார்சல் கட்டும் இடத்தில் வைத்திருந்தார்.
இதே பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் சீனிவாஸ் தேசாயி, சிற்றுண்டி வாங்க ஹோட்டலுக்கு வந்தார். இட்லி, வடை, தோசையை பார்சல் கட்டும்படி கேட்டார். அப்போது ரசூல்சாப் சவுதாகர், கவன குறைவாக தோசைக்கு பதிலாக, பணம் இருந்த கவரை பார்சல் கட்டி கொடுத்தார்.
சீனிவாஸ் தேசாயி, வீட்டுக்கு சென்று பிள்ளைகளுடன் சிற்றுண்டி சாப்பிட, பார்சலை பிரித்த போது, தோசைக்கு பதிலாக பணம் இருப்பது தெரிந்தது. ஹோட்டல் உரிமையாளரின் குளறுபடி புரிந்தது. உடனடியாக ஹோட்டலுக்கு வந்து, ரசூல்சாப் சவுதாகரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
பணத்தை எங்கு வைத்தோம் என, தெரியாமல் தேடிய இவர், பணம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியர் சீனிவாச தேசாயின் நேர்மையை பாராட்டினார்.