ADDED : ஜூலை 24, 2024 11:31 PM

பெங்களூரு : ''கர்நாடகாவில் 1,351 கிராமங்களில் மண் சரிவு அபாயம் உள்ளதாக, நில ஆய்வியல் வல்லுனர்கள் அறிக்கை அளித்துள்ளனர்,'' என, வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா மேலவையில் தெரிவித்தார்.
மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் ரவி, ரவிகுமார், சலவாதி நாராயண சாமி, பிரதாப் சிம்ஹ நாயக், பாரதி ஷெட்டி, கேசவபிரசாத், பூஜார் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறியதாவது:
இந்திய புவியியல் ஆய்வுத்துறை வல்லுனர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். கர்நாடகாவின் 250 கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட, 1,351 கிராமங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கிராமங்கள் சிக்கமகளூரு, தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, குடகு, ஷிவமொகா, ஹாசன் மாவட்டங்களில் உள்ளன. இந்திய புவியியல் ஆய்வுத்துறை வெளியிட்ட நெறிமுறைப்படி, தடுப்பு நடவடிக்கை எடுப்போம். இதற்காக 100 கோடி ரூபாய் செலவிட, அரசு முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்.
மண் சரிவுக்கு பல காரணங்கள் உள்ளன. இரண்டே நாட்களில் 50 செ.மீ., மழை பெய்வதும் ஒன்றாகும்.
அடிப்படை வசதிகளுக்காக, இறக்கமான சாலைகள் அமைப்பது, இயற்கையாக பாயும் ஆறுகளை தடுத்தது, காபி எஸ்டேட்களில் அமைக்கப்பட்ட குளங்கள், விவேகம் இன்றி நெடுஞ்சாலை பணிகள் நடத்துவது என, பல்வேறு காரணங்களால், மண் சரிவு ஏற்படுவது, ஆய்வில் தெரிய வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.