ADDED : ஜூலை 24, 2024 11:31 PM

பெங்களூரு : ''தொகுதி மேம்பாட்டு நிதியை 100 சதவீதம் முழுமையாக செலவு செய்தது, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., மட்டுமே,'' என்று புள்ளியியல் துறை அமைச்சர் டி.சுதாகர், சட்டசபையில் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது சட்டசபையில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் ஆனந்த்: தொகுதி மேம்பாட்டு நிதியாக எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 2 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்வதற்கு, இந்த நிதி போதாது. 5 கோடி ரூபாய் தேவை என்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளதா.
அமைச்சர் டி.சுதாகர்: தொகுதி மேம்பாட்டுக்காக, 224 எம்.எல்.ஏ.,க்களுக்கும், 75 எம்.எல்.சி.,க்களுக்கும் ஆண்டுக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த 2023 - 24ம் ஆண்டில், அரசு ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., என மூன்று பேர் மட்டுமே 100 சதவீதம் செலவு செய்துள்ளனர்.
மற்றவர்களில், 40 எம்.எல்.ஏ.,க்கள், ஏழு எம்.எல்.சி.,க்கள் முழு தொகை வழங்கும்படி விண்ணப்பம் கொடுத்தனர். மீதி 184 எம்.எல்.ஏ.,க்கள், 68 எம்.எல்.சி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கேட்கவில்லை.
இந்த வகையில், தொகுதி மேம்பாட்டுக்கு, ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் போதாது என்பதில் உண்மையில்லை. எனவே ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வழங்கும் நோக்கம் அரசிடம் இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.