ADDED : ஜூலை 12, 2024 05:16 PM

விஜயநகரா:
உலக பிரசித்தி பெற்ற ஹம்பியில், அவ்வப்போது சிறுத்தை தென்படுவதால், சுற்றுலா பயணியர் பீதி அடைந்துள்ளனர்.
விஜயநகரா, ஹொஸ்பேட்டில் உள்ள ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். கலை நயமிக்க மண்டபங்கள், பாரம்பரிய சின்னங்கள், கோவில்கள் இங்குள்ளன. இவற்றை காண தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இதன் சுற்றுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால், சுற்றுலா பயணியர் அச்சத்துடன் இடங்களை சரியாக சுற்றி பார்க்காமல், அவசர, அவசரமாக செல்கின்றனர்.
ஹேமகூடா மலையில் நேற்று மாலை, சிறுத்தை தென்பட்டது. இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தது. இதை சுற்றுலா பயணியர் பார்த்தனர். சிறுத்தையை பிடிக்கும்படி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு வந்து பார்வையிட்டனர். சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, ஹம்பி புறநகரில் விவசாய நிலத்தில் பணியாற்றிய நபரை, சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியது. இப்போது விருபாக்ஷா கோவில் அருகில் உள்ள, ஹேமகூட மலையில் சிறுத்தை நடமாடுகிறது.
***