பீன்யா- - நாகசந்திரா மேம்பாலம் கனரக வாகனங்களுக்கு அனுமதி?
பீன்யா- - நாகசந்திரா மேம்பாலம் கனரக வாகனங்களுக்கு அனுமதி?
ADDED : ஜூலை 22, 2024 06:23 AM
பெங்களூரு: பெங்களூரு பீன்யா- - நாகசந்திரா இடையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில், இந்த மாத இறுதியில் இருந்து, கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.
பெங்களூரு துமகூரு ரோட்டில் பீன்யாவில் இருந்து நாகசந்திரா வரை 4.20 கி.மீ., துார மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம், பெங்களூரில் இருந்து துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி, பீதர், ஷிவமொகா, ஹாசன், சிக்கமகளூரு உட்பட 18 மாவட்டங்களை இணைக்கிறது.
கடந்த 2021 டிசம்பரில் மேம்பாலத்தின் ஒரு இடத்தில், இரு துாண்களை இணைக்கும் கேபிள்களில் துருப்பிடித்தன. இதனால் கேபிள்களை மாற்றுவதற்காக மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதன்பின், மேலும் சில கேபிள்களையும் மாற்றும் பணிகள் நடந்தன. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இணைப்பு சாலையில் வாகனங்கள் சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேம்பால துாண்களில் கேபிள்கள் பதிக்கும் பணிகள், சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றன.
இதையடுத்து மேம்பாலத்தில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான லாரிகளை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகளும், ஆய்வு மேற்கொண்டனர்.
கேபிள்கள் உறுதியாக இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், மேம்பாலத்தில் கனரக வாகனங்களை இயக்க அனுமதி வழங்கி உள்ளனர்.
எனவே, இம்மாத இறுதியில் இருந்து, மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லலாம் என தெரிகிறது. இதன்மூலம் துமகூரு சாலையில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.