ADDED : ஜூலை 22, 2024 06:18 AM
பாகல்கோட்: புதிய மொபைல் போனுக்கு பதிலாக, 'செகண்ட் ஹேண்ட்' மொபைல் போன் கொடுத்த நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
பாகல்கோட், ஹுன்குந்தின் சுள்ளேபாவி கிராமத்தை சேர்ந்தவர் அனில்கவுடா, 35. இவர், 'பிளிப்கார்ட்' ஆன்லைன் வணிக நிறுவனத்தில், 23,990 ரூபாய் கொடுத்து, 'போகோ எக்ஸ் 3 ப்ரோ' என்ற மொபைல் போனை வாங்கினார்.
அது சரியாக செயல்படவில்லை. அதை பரிசீலித்த போது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் போன் என்பது தெரிந்தது.
மொபைல் போன் அனுப்பிய நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தகவல் கூறி மாற்றி தரும்படி கேட்டார். வேறு போன் அனுப்புவதாக கூறிய நிறுவனத்தினர், அனுப்பவே இல்லை. இது தொடர்பாக, நுகர்வோர் நீதிமன்றத்தில் அனில் கவுடா மனு தாக்கல் செய்தார்.
நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்த போது, இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்திய போனை, நிறுவனம் விற்பனை செய்திருப்பது தெரிந்தது. எனவே மனுதாரருக்கு மொபைல் போனுக்கான தொகையை 9 சதவீதம் வட்டி சேர்த்து கொடுக்க வேண்டும். அவரை நீதிமன்றத்துக்கு அலைய வைத்ததற்காக, 15,000 ரூபாய், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய் வழங்கும்படி, பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.