ஆர்.வி., ரோடு - பொம்மசந்திரா டிச., 8 முதல் மெட்ரோ ரயில்?
ஆர்.வி., ரோடு - பொம்மசந்திரா டிச., 8 முதல் மெட்ரோ ரயில்?
ADDED : ஜூலை 22, 2024 06:18 AM
பெங்களூரு: ஆர்.வி., ரோடு -- பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் சேவை, டிசம்பர் 8ம் தேதி துவங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது செல்லகட்டா -- ஒயிட்பீல்டு; நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிட்யூட் இடையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓசூர் ரோடு -- கனகபுரா ரோடு இடையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, ஆர்.வி., ரோடு -- பொம்மசந்திரா இடையில் 5,745 கோடி ரூபாய் செலவில் 18.82 கி.மீ., துாரத்திற்கு புதிய மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிரைவர் இல்லா ரயில்
இந்த புதிய பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. டிரைவர் இல்லாத மற்ற ரயில்கள் தயாரிக்க சீனாவை சேர்ந்த சி.ஆர்.ஆர்.சி., நஞ்ஜிங் புஷன் கோ லிமிடெட் என்ற நிறுவனத்துடன், மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.
இந்த நிறுவனம் 1,578 கோடி ரூபாய் செலவில் 36 ரயில்களை தயாரித்து வழங்குகிறது.
முதல் கட்டமாக ஒரே ஒரு மெட்ரோ ரயில் மட்டும் சீனாவில் இருந்து பெங்களூரு வந்தது. அந்த ரயிலை பயன்படுத்தி சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது.
ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், மெட்ரோ ரயில் சேவை எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய பாதையில் டிசம்பர் 8 ம் தேதி முதல் ரயில் சேவை துவங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் கட்டமாக ஆகஸ்ட் 10 அல்லது 15ம் தேதிக்குள், ஆறு பெட்டிகள் கொண்ட முதல் ரயில் பெங்களூரு வரும் என, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் மகேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.
அதன்பின் ஒவ்வொரு மாதமும் 2 ரயில்களை சீனா வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.டி., ஊழியர்கள்
புதிய வழித்தடத்தில் ராகிகுட்டா; ஜெயதேவா மருத்துவமனை; பி.டி.எம்., லே- - அவுட்; சென்ட்ரல் சில்க் போர்டு, பொம்மனஹள்ளி, கார்வேபாவிபாளையா; கூட்லு கேட்; சிங்க சந்திரா; ெஹாசா ரோடு; பெரடென அக்ரஹாரா; கோனப்பன அக்ரஹாரா; எலக்ட்ரானிக் சிட்டி; ஹுஸ்கூர் ரோடு, ஹெப்பகோடி ஆகிய ரயில் நிலையங்கள் வர உள்ளன.
இந்த பாதையில் ரயில் சேவை துவங்கினால், ஐ.டி., நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோருக்கு அனுகூலமாக இருக்கும்.