ADDED : ஜூன் 16, 2024 01:34 AM
புதுடில்லி, 'ராமர் மீது பக்தி செலுத்தியவர்கள், அகம்பாவம் பிடித்தவர்களாக மாறினர்' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, ''ராமரை வழிபட்டவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளனர்,'' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், 'ராமர் மீது பக்தி செலுத்தியவர்கள், படிப்படியாக அகம்பாவம் பிடித்தவர்களாக மாறினர்.
'அவர்களின் ஆணவத்தால், அந்தக் கட்சிக்கு, 241 இடங்களை மட்டுமே ராமர் கொடுத்தார்' என, பா.ஜ.,வை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார்.
'ராமரை நம்ப மறுத்தவர்களும், 234 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தனர்' என, 'இண்டியா' கூட்டணியை குறிப்பிட்டும் அவர் பேசினார்.
பா.ஜ.,வை குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கருத்து தெரிவித்தது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திரேஷ் குமார் நேற்று கூறியதாவது:
இந்த நேரத்தில் நாட்டின் சூழல் மிகவும் தெளிவாக உள்ளது. ராமரை வழிபடுவதாக உறுதியளித்தவர்கள், தற்போது ஆட்சியில் உள்ளனர். ராமரை எதிர்த்தவர்கள் ஆட்சியில் இல்லை.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது. அவரது தலைமையில் நாடு முன்னேறும். இந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.