பயங்கரவாதிகள் மிரட்டல் அதிகரிப்பால் உஷார் நிலை! ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு தீவிரம்
பயங்கரவாதிகள் மிரட்டல் அதிகரிப்பால் உஷார் நிலை! ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு தீவிரம்
UPDATED : ஜூன் 16, 2024 01:52 PM
ADDED : ஜூன் 16, 2024 02:01 AM

புதுடில்லி ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் என, பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு -- காஷ்மீரில் லோக்சபா தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது. மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்றனர். இது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் சில பயங்கரவாத செயல்களை அவை நடத்தியுள்ளன. இது, பாதுகாப்புப் படைகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.
தலைவலி
மத்தியில், மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு, இந்த தாக்குதல் சம்பவங்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார். இதைத் தவிர, அமர்நாத் புனித யாத்திரையும் துவங்க உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் செப்டம்பருக்குள், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலையும் நடத்தி முடிக்க வேண்டும்.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துஉள்ளது. ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், பாதுகாப்புப் படைகளுடன், தொடர் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
ஜம்மு பிராந்தியத்தில் ஹிந்துக்கள் அதிகம் உள்ளனர். இந்தப் பகுதியில்தான் சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது.
இதன் வாயிலாக ஹிந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசு மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதுதான், பயங்கரவாதிகளின் திட்டமாக உள்ளதாக உளவு அமைப்புகள் கூறியுள்ளன.
இந்த சூழ்நிலையில், வரும் நாட்களில் அதிக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என, பயங்கரவாத அமைப்புகள், சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மிரட்டல்கள் எண்ணிக்கை அதிரித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் எங்கெங்கு தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கும் வகையில், இந்த செய்திகள் வெளியிடப்படுகின்றன.
உளவு அமைப்புகளும், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றன. இதையடுத்து, ஒருங்கிணைந்த முறையில் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
நடவடிக்கை
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், இன்று டில்லியில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், ராணுவம், உளவு அமைப்புகள், பாதுகாப்புப் படைகள், உள்துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு நிபுணர்களை வரவழைத்துள்ளது.
மேலும், பல மாநிலங்களில் இருந்து சிறப்புப் படைகளும், கூடுதல் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை, எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த யாத்திரை முடிவுக்கு வந்தபின், ஜம்மு - காஷ்மீரில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்த பின், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்.