சர்வநாசம் செய்ய நினைக்கிறார் குமாரசாமி மீது சிவகுமார் புகார்
சர்வநாசம் செய்ய நினைக்கிறார் குமாரசாமி மீது சிவகுமார் புகார்
ADDED : ஜூலை 27, 2024 10:55 PM
பெங்களூரு: ''எங்களை சர்வநாசம் செய்வது குறித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி தினமும் யோசிக்கிறார்,'' என துணை முதல்வர் சிவகுமார் குற்றம் சாட்டினார்.
ராம்நகர் மாவட்டத்தின் பெயரை, பெங்களூரு தெற்கு என மாற்றம் செய்வதற்கு, கர்நாடக அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதற்கு, 'ராம்நகர் மாவட்டத்தின் பெயரை மாற்றுவோர் சர்வநாசமாகி விடுவர்' என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி சாபம் விட்டிருந்தார்.
இது குறித்து, துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று கூறியதாவது:
நான், பெங்களூரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவன். தேவகவுடா, குமாரசாமி ஹாசனில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்த போது, பெங்களூரு என்று தான் இருந்தது.
குமாரசாமி முதல்வரான பின், பெங்களூரை இரண்டாக பிரித்து, ராம்நகர் என்ற புதிய மாவட்டம் உருவாக்கினார். அப்போதே, பெங்களூரு என பெயர் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள் என்று அவரை அறிவுறுத்தினோம்.
முன்னாள் முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா விதான் சவுதாவை கட்டியது பெங்களூரில் தான். ராமகிருஷ்ண ஹெக்டே வாழ்ந்ததும் பெங்களூரில் தான்.
தற்போது மாவட்டத்தின் பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது. மாவட்டத்தின் தலைநகராக ராம்நகர் தொடர்ந்து செயல்படும். 2028க்கள் மீண்டும் பெயரை மாற்றுவோம் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
அப்போதும், காங்கிரஸ் ஆட்சி தான் இருக்கும் என்பதை இப்போதே எழுதி வைத்து கொள்ளுங்கள். அவர் மீண்டும் முதல்வராவார் என்று தலையில் எழுதி வைக்கவில்லை. எங்களை சர்வநாசம் செய்வது குறித்து தான் அவர் தினமும் யோசிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.