அருந்ததி ராய் மீது 'உபா' வழக்கு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
அருந்ததி ராய் மீது 'உபா' வழக்கு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ADDED : ஜூன் 16, 2024 02:03 AM

புதுடில்லி, எழுத்தாளர் அருந்ததி ராய் மீது 'உபா' எனப்படும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்த நிலையில், இந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளிடையே மோதல் வெடித்துள்ளது.
டில்லியில் கடந்த 2010ல் 'சுதந்திரம் தான் ஒரே வழி' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் பங்கேற்றார்.
கண்டனம்
அவருடன் ஜம்மு - காஷ்மீர் மத்திய பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அருந்ததி ராய் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதே கருத்தை ஷேக் சவுகத் வலியுறுத்தியிருந்த நிலையில், இருவர் மீது தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், 14 ஆண்டு களுக்குப் பின் அருந்ததி ராய், ஷேக் சவுகத் ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று முன்தினம் அனுமதி அளித்தார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துஉள்ளன.
இதுகுறித்து காங்., தலைவர் பி.கே.ஹரிபிரசாத் தன் சமூக வலைதள பதிவில், 'கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்து வேறுபாடுகளை நசுக்குவதால் பாசிசம் வளர்கிறது.
'தேர்தல் தோல்வியை திசைதிருப்பும் வகையில், அவர்களுக்கு கடும் நெருக்கடிகளை பா.ஜ., அரசு தினமும் தருகிறது. கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது' என தெரிவித்துள்ளார்.
திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா கூறுகையில், 'அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததன் வாயிலாக அவர்கள் திரும்பி வந்துவிட்டதை நிரூபிக்க பா.ஜ., முயற்சிக்கிறது.
'அவர்கள் முன்பு இருந்ததைப் போல ஒருபோதும் திரும்பி வர முடியாது. இந்த பாசிசத்திற்கு எதிராகத்தான் இந்தியர்கள் ஓட்டளித்துள்ளனர்' என, கூறியுள்ளார்.
எவ்வளவு காலம்
இதற்கு பதிலளித்து உள்ள பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, 'பிரிவினைவாத மொழி பேசும் அருந்ததி ராய் மீது வழக்கு பதிய கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
'இதற்கு ஏன் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கின்றனர்? பிரிவினைவாதிகளை ஆதரிப்பதை காங்கிரஸ் வழக்கமாகவே வைத்துள்ளது.
'காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மீது ஏன் இவ்வளவு பரிவு காட்டுகின்றன? இன்னும் எவ்வளவு காலம் அவர்களை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பாதுகாக்கும்?' என கேள்வி எழுப்பிஉள்ளார்.