'தக் லைப்' படம் திரையிட அனுமதி கோரி வழக்கு! கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் கமல் மனு
'தக் லைப்' படம் திரையிட அனுமதி கோரி வழக்கு! கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் கமல் மனு
UPDATED : ஜூன் 03, 2025 03:53 AM
ADDED : ஜூன் 03, 2025 03:51 AM

பெங்களூரு: நடிகர் கமலின், தக் லைப் திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த இடையூறும் இல்லாத வகையில், மாநில அரசுக்கும், போலீஸ் டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்றார்.
இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், நடிகர் கமல், 'மன்னிப்பு கேட்க முடியாது' என கூறிவிட்டார். கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை விதிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்து உள்ளது.
கோர்ட்டில் மனு
இந்நிலையில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும், தக் லைப் படத்தின் இணை தயாரிப்பாளருமான நாராயணன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
தக் லைப் திரைப்படம், கர்நாடகா உட்பட உலகம் முழுதும் நாளை மறுநாள் வெளியாகிறது. இத்திரைப் படத்துக்காக, 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
படத்தின், இசை வெளியீட்டு விழாவில், கமல் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அவரது பேச்சு கன்னடம், தமிழ் பேசுபவர்களுக்கு இடையிலான கலாசார ஒற்றுமை, பாசத்தை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இப்படத்தில் வரும் எந்த நடிகர்களின் வசனங்களிலும், இரண்டு மொழிகளும் குறிப்பிடப்படவில்லை. கமல் மன்னிப்பு கேட்டாலும், படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்து உள்ளது.
பாதுகாப்பு
எனவே, படத்தின் வெளியீட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட வர்த்தக சபைக்கும், கர்நாடக மாநில போலீஸ் துறைக்கும் தபால், மின்னஞ்சல் மூலம் கடந்த 31ம் தேதி கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, ஜூன் 5ம் தேதி கர்நாடகாவில் திரைப்படம் வெளியாவதற்கு மாநில அரசும், போலீஸ் துறையும், திரைப்பட வர்த்தக சபையினரும் விதித்துள்ள தடையை நீக்கி, திரைப்படம் பிரச்னையின்றி வெளியாக ஆவன செய்ய வேண்டும்.
திரையரங்கிற்கு போதுமான பாதுகாப்பு வழங்க, மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கும், நகர போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும்.
படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் குழுவுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
மேலும், படம் வெளியாகும் திரையரங்கின் உரிமையாளர்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்கவும், படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளிலும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.