தேச பக்தியுடன் இருப்பது கடினமா? காங்., மூத்த தலைவர் ஆவேசம்!
தேச பக்தியுடன் இருப்பது கடினமா? காங்., மூத்த தலைவர் ஆவேசம்!
UPDATED : ஜூன் 03, 2025 04:27 AM
ADDED : ஜூன் 03, 2025 04:09 AM

புதுடில்லி: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்த, வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் எம்.பி.,க்கள் குழுக்களில், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடம்பெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்படும் நிலையில், ''தேசபக்தியுடன் இருப்பது அவ்வளவு கடினமா?'' என, காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆவேசமாக தெரிவித்தார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த, காங்., - எம்.பி., சசி தரூர், தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில், ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுக்களில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் உள்ளனர். தலா ஐந்து முதல் ஆறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த குழுவினர், நம் நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உரிய ஆதாரங்களுடன், வெளிநாட்டு அரசுகளிடம் சசி தரூர், கனிமொழி உள்ளிட்டோர் விளக்கினர்.
பரபரப்பு
சசி தரூரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த காங்., நிர்வாகிகள், பா.ஜ.,வின் சூப்பர் செய்தித் தொடர்பாளர் போல் அவர் செயல்படுவதாக விமர்சித்தனர்.
நாட்டின் ஒற்றுமை விவகாரத்தில், சொந்த கட்சியினரே சசி தரூரை விமர்சித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்., மற்றொரு மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், ஐக்கிய ஜனதா தள எம்.பி., சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழுவில் இடம் பெற்றுள்ளார். தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு சென்ற இந்த குழு, தற்போது மலேஷியாவில் உள்ளது.
வெளி நாடுகளுக்கு சென்றுள்ள குழுக்களில், எதிர்க்கட்சியினர் இடம் பெற்றது பேசுபொருளான நிலையில், சமூக வலைதளத்தில் காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நேற்று வெளியிட்ட பதிவு:
பயங்கரவாதத்திற்கு எதிரான பணியில் இந்தியாவின் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் போது, உள்நாட்டில் உள்ளவர்கள் அரசியல் விசுவாசத்தை கணக்கிடுவது வருத்தமளிக்கிறது. தேச பக்தியுடன் இருப்பது அவ்வளவு கடினமா? இவ்வாறு அவர் பதிவிட்டார்.
நம் கடமை
இதன்பின், கோலாலம்பூரில் நிருபர்களிடம் சல்மான் குர்ஷித் கூறியதாவது:
பா.ஜ.,வினர் இருக்கும் குழுவில் உங்களுக்கு என்ன வேலை என, தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. இப்படி எல்லாம் பேசுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.
நம் நாட்டின் ஒற்றுமைக்காகவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். இதில் அரசியல் பார்ப்பது சரியல்ல.
மத்திய அரசை எதிர்க்க விரும்பியிருந்தால் நான் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. நான், இந்தியாவுக்காக பேச வந்துள்ளேன். நாட்டுக்காக யார் பேசினாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பது நம் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை தொடர்ந்து, சசி தரூரை காங்., நிர்வாகிகள் விமர்சித்து வரும் நிலையில், அவர்களுக்கு சல்மான் குர்ஷித் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.