உத்தராகண்டில் மேகவெடிப்பு; தாம்சா நதியில் வெள்ளப்பெருக்கு; ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்
உத்தராகண்டில் மேகவெடிப்பு; தாம்சா நதியில் வெள்ளப்பெருக்கு; ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்
ADDED : செப் 16, 2025 09:05 AM

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு கனமழை பெய்தது. தாம்சா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்தன.
டேராடூனில் மேக வெடிப்பு காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்சா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல வீடுகள், சாலைகள் இடிந்து விழுந்தன. கடைகள் அடித்து செல்லப்பட்டன. இதில் இரண்டு பேர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மகாதேவ் கோவில் வெள்ளத்தில் மூழ்கின. இது குறித்து கோவில் பூசாரி ஆச்சார்யா ஜோஷி கூறியதாவது:
அதிகாலை 5 மணி முதல் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடத் தொடங்கியது. அதை தொடர்ப்து கோவில் வளாகம் முழுவதும் நீரில் மூழ்கியது. ஆறுகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்று இரவு டேராடூனில் பெய்த கனமழையால் சில கடைகள் சேதமடைந்துள்ளன. மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் நிலைமையை கண்காணித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ரெட் அலெர்ட்
டேராடூனில் மணிக்கு 15 மி.மீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 62 முதல் 87 கி.மீ., வரை பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.