!காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் அதிருப்தி: எதிர்பார்த்த வாரிய 'சீட்' கிடைக்கவில்லையாம்
!காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் அதிருப்தி: எதிர்பார்த்த வாரிய 'சீட்' கிடைக்கவில்லையாம்
ADDED : ஜன 27, 2024 11:22 PM
பெங்களூரு: எதிர்பார்த்த வாரியத்தலைவர் பதவி கிடைக்காததால், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், கட்சியினரை சந்திப்பதை தவிர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. பெரும்பாலான மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்தவர்களை, அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முன்வந்தது.
பல குளறுபடிகளுக்கு மத்தியில், எட்டு மாதங்களுக்கு பின்னர் 34 எம்.எல்.ஏ.,க்களை, வாரிய தலைவர்களாக நியமித்து, நேற்று முன்தினம் அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன் மூலம் எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ச்சி அடைவர் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சியே மிஞ்சி உள்ளது.
கண்டுகொள்வது இல்லை
தாங்கள் எதிர்பார்த்த வாரியங்கள் கிடைக்காததால், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
'தாங்கள் கேட்ட வாரியங்கள் தந்தால், பதவி ஏற்கிறோம். இல்லாவிட்டால் வாரிய தலைவர் பதவியே வேண்டாம்; அமைச்சர் பதவி கொடுங்கள்' என, அவர்கள் பகிரங்கமாக கேட்டு உள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்கள் பாகேபள்ளி சுப்பாரெட்டி, ராய்ச்சூர் ரூரல் பசவராஜ் தத்தல், மாஸ்கி பசனகவுடா துர்விஹால் உள்ளிட்ட சிலர், வாரிய தலைவர் பதவி தங்களுக்கு வேண்டாம்; அமைச்சர் தான் வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், துணை முதல்வர் சிவகுமார் ஈடுபட்டு உள்ளார்.
பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கட்சியினரை சந்திப்பதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் வாரிய தலைவர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் தொண்டர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். 'கட்சிக்காக பல ஆண்டுகள் உழைக்கும் எங்களை கண்டுகொள்வது இல்லை. முதலில் தொண்டர்களுக்கு தான் பதவி கொடுத்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
திருப்திபடுத்த முடியாது
இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
அனைவரின் கருத்தையும் கேட்டு, நீண்ட விவாதத்திற்கு பிறகே, வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து உள்ளோம்.
அமைச்சர் ஆக வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆசை இருப்பது இயல்பு தான். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றம் வரும். அப்போது அமைச்சர் பதவி கிடைக்கும். கட்சி எந்த பதவியை கொடுத்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
முதற்கட்டமாக 34 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கொடுத்து உள்ளோம். இனி தொண்டர்களுக்கு தான் பதவி கொடுப்போம். அனைவரையும் திருப்திபடுத்த முடியாது.
ஷிவமொகாவில் பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவை, மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, எங்கள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா கூறி இருப்பது பற்றி எனக்கு தெரியாது.
ஷிவமொகாவில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார். பா.ஜ.,வை 28 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து, காங்கிரசை அழிக்க வேண்டும் என்று, ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.,வை அழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.