காங்., - எம்.எல்.ஏ., ராஜினாமா மிரட்டல்; சித்து அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு
காங்., - எம்.எல்.ஏ., ராஜினாமா மிரட்டல்; சித்து அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 24, 2025 03:04 AM
ADDED : ஜூன் 24, 2025 03:02 AM

பெங்களூரு: “கர்நாடக அரசின் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், என் பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,” என, காங்., - எம்.எல்.ஏ., ராஜு காகே கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வீட்டுவசதி துறையில் வீடுகளை ஒதுக்க லஞ்சம் வாங்கப்படுவதாக, காங்., மூத்த எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், பி.ஆர்.பாட்டீலுக்கும், வீட்டுவசதி துறை அமைச்சர் ஜமீர் அகமதுகானுக்கும் இடையில், வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே நேற்று அளித்த பேட்டி:
மாநில அரசின் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் என் தொகுதிக்கு, முதல்வரின் சிறப்பு மானியத்தின் கீழ் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், 12 கோடி ரூபாயை சாலை மேம்பாட்டிற்கும், மீதம் 13 கோடி ரூபாயை சமூக நலக்கூடங்கள் கட்டவும் முன்மொழியப்பட்டது. ஆனால், இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
பி.ஆர்.பாட்டீல் கூறியதை விட, என் தொகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. பி.ஆர்.பாட்டீல் பேசி இருப்பதை நான் வரவேற்கிறேன். என் மனம் மிகவும் புண்பட்டு உள்ளது. ராஜினாமா செய்யும் மனநிலையில் உள்ளேன்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், என் பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை இவ்வாறு அவர் கூறினார்.