கருத்துக்கணிப்பை புறக்கணிக்கும் காங்.,: அமித்ஷா கிண்டல்
கருத்துக்கணிப்பை புறக்கணிக்கும் காங்.,: அமித்ஷா கிண்டல்
UPDATED : ஜூன் 01, 2024 01:15 PM
ADDED : ஜூன் 01, 2024 12:27 PM

புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை கிண்டல் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயந்து ஓடாதீர்கள் எனக்கூறியுள்ளார்.
லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று( ஜூன்1) நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாகிறது. அதற்கு முன் டிஆர்பி.,க்காக யூகங்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்த காரணமும் இல்லை. கருத்துக் கணிப்பு தொடர்பான எந்த விவாதங்களிலும் காங்கிரஸ் பங்கேற்காது. விவாதத்தின் நோக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜூன் 4 முதல் விவாதங்களில் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதனை கிண்டல் செய்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: படுதோல்வி அடையப் போவதை காங்கிரஸ் உணர்ந்து கொண்டு உள்ளது. எனவே, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊடகத்தையும், மக்களையும் அக்கட்சி பார்க்கும். இதனால், கருத்துக்கணிப்பில் இருந்து அக்கட்சி பயந்து ஓடுகிறது. பயந்து ஓடாமல், தோல்வியை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நான் அந்த கட்சியை கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: பொம்மை பறிக்கப்பட்ட குழந்தையை போல், இந்தியாவின் பழமையான கட்சி நடந்து கொள்வது சரியல்ல. எதிர்க்கட்சியில் இருக்கும் பெரிய அரசியல் கட்சியிடம் இருந்து அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன் எனக்கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ‛இண்டியா' கூட்டணி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? கருத்துக்கணிப்பில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறியதன் மூலம் ‛ இண்டியா ' கூட்டணியும், காங்கிரசும் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளன. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என அக்கட்சிகளுக்கு தெரியும் எனக்கூறியுள்ளார்.