பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது ஒழுங்கு நடவடிக்கை? மேலிடம் ஆலோசனை
பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது ஒழுங்கு நடவடிக்கை? மேலிடம் ஆலோசனை
ADDED : ஆக 05, 2024 11:09 PM

பெங்களூரு : சொந்த கட்சி தலைவர்களையே பகிரங்கமாக விமர்சித்து கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா அல்லது கட்சியில் இருந்தே துாக்கி எறிவதா என, பா.ஜ., மேலிடம் தீவிரமாக ஆலோசிக்கிறது.
விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், தன் மாறுபட்ட பேச்சு, செயல் மற்றும் ஹிந்துத்வா சிந்தனைகளால் அடையாளம் காணப்பட்டவர். 30 ஆண்டுகளாக அரசியலில் பிரபலமாக திகழ்கிறார். இதற்கு முன் ம.ஜ.த.,வில் இருந்த இவர், பின் பா.ஜ.,வில் இணைந்தார். இவரை கட்சிக்கு அழைத்து வந்ததே, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான்.
'டார்கெட்'
ஆனால் சமீப ஆண்டுகளாக, இவரது குடும்பத்தினரையே எத்னால், மிகவும் கிண்டலாக விமர்சிக்கிறார். இவர் எதிர்க்கட்சிகளை விமர்சித்ததை விட, சொந்த கட்சியான பா.ஜ., தலைவர்களை, 'டார்கெட்' செய்து, வசைபாடியதே மிகவும் அதிகம்.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, இவரை எத்னால், பல முறை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துள்ளார்.
'முதல்வர் பதவிக்கு, 2,500 கோடி ரூபாயும், அமைச்சர் பதவிக்கு 100 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும். என்னிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை.
எனவே எனக்கு பதவி கிடைக்கவில்லை' என ஊடகத்தினர் முன்னிலையில், பகிரங்கமாக கூறியிருந்தார். இது, கட்சியை நெருக்கடியில் தள்ளியது.
கடந்த 2023 சட்டசபை தேர்தல் முடிந்த பின், எத்னால் எதிர்க்கட்சி தலைவர் ஆவார் என, பலரும் எதிர்பார்த்தனர்.
இவரும் எதிர்க்கட்சி தலைவராக ஆர்வமாக இருந்தார். தன் ஆசையை மேலிடத்திலும் கூறினார்.
ஆனால், அசோக் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், எத்னால் ஏமாற்றமடைந்தார். தன் ஆற்றாமையை அவ்வப்போது, வார்த்தைகளால் கொட்டி தீர்க்கிறார்.
தலைகுனிவு
எதிர்க்கட்சி தலைவர் பதவி கை நழுவியதால், தனக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என, நினைத்தார். ஆனால், அதுவும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வசமானது.
இதனால் எத்னாலின் கோபம், எரிச்சல் மேலும் அதிகரித்தது. 'கட்சி முழுதும் அப்பா, மகன்கள் கைப்பிடியில் சென்று விட்டது. இதை மீட்க வேண்டும். இதற்காக நான் போராடுவேன்' என்கிறார்.
கட்சி எடியூரப்பா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, தனக்கு எந்த பதவியும் கிடைக்காது என்பது, எத்னாலின் எண்ணமாகும்.
எனவே, காங்கிரஸ் தலைவர்களை குற்றஞ்சாட்டும் போது, தன் கட்சி தலைவர்களை விமர்சிக்க எத்னால் மறப்பதே இல்லை.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்திலும், இதேபோன்று பேசியதால், மாநில தலைவர் விஜயேந்திராவும், எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் தலைகுனிய நேரிட்டது.
பா.ஜ., மேலிடம் பலமுறை கண்டித்தும், எத்னாலின் பேச்சும், செயலும் மாறவில்லை.
'மூடா' முறைகேடு குற்றச்சாட்டில், முதல்வர் சித்தராமையா வசமாக சிக்கியுள்ளார்.
இவர் ராஜினாமா செய்ய வேண்டும் என, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பெங்களூரில் இருந்து, மைசூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது மக்களின் பார்வை, பா,ஜ., மீது திரும்பியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், எத்னால் மனம் போனபடி பேச துவங்கியுள்ளார்.
வரப்பிரசாதம்
'விஜயேந்திரா கட்சியின் நலனுக்காக பாதயாத்திரை நடத்தவில்லை. மாறாக, துணை முதல்வர் சிவகுமாரின் விருப்பப்படி, சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் நோக்கில், உள் ஒப்பந்தம் செய்து கொண்டு விஜயேந்திரா பாதயாத்திரை நடத்துகிறார்' என, எத்னால் குற்றஞ்சாட்டினார்.
இவரது பேச்சு காங்கிரசாருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதையே பா.ஜ.,வுக்கு எதிரான அஸ்திரமாக பயன்படுத்துகின்றனர். 'எங்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன், உங்கள் கட்சியின் மூத்த தலைவர் எத்னாலின் கேள்விக்கு, பதில் அளியுங்கள்' என்கின்றனர்.
இதனால் பா.ஜ., தொண்டர்களே அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொண்டர்கள்
'எத்னால் ஒரு முறை அல்ல, பல முறை இதே போன்று சொந்த கட்சியை பற்றி விமர்சித்து, தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார். அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது. இவரது கேலி, கிண்டல்களை எதற்காக சகிக்க வேண்டும்' என, தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எத்னாலின் குசும்புத்தனமான பேச்சுகளை, டில்லி தலைவர்களும் கவனித்து வருகின்றனர்.
இதை தீவிரமாக கருதிய பா.ஜ., மேலிடம், எத்னால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா அல்லது கட்சியில் இருந்தே அவரை துாக்கி எறியலாமா என, தீவிரமாக ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
எந்த நேரத்திலும் எத்னால் மீது, நடவடிக்கை எடுக்கலாம் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.