இன்று வயநாடு, 4 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பெட்டிமுடி நிலச்சரிவு
இன்று வயநாடு, 4 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பெட்டிமுடி நிலச்சரிவு
ADDED : ஆக 05, 2024 11:18 PM

மூணாறு:கேரளாவை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு சம்பவம் போன்று மூணாறு அருகே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஆக.,6) நடந்த துயர சம்பவத்தை தொழிலாளர்களால் மறக்க இயலவில்லை.
கேரளாவில் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. நுாற்றுக்கணக்கானோரை காணவில்லை. நன்கு உறங்கி கொண்டிருந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது போன்று மூணாறு அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே (ஆக., 6) நாளில் நடந்தது.
மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் பெய்த கன மழையில் 2020 ஆக.,6ல் இரவு 10.45 மணிக்கு ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் தொழிலாளர்கள் வசித்த குடியிருப்புகள் உட்பட பல கட்டடங்கள் மண்ணிற்குள் புதைந்தன. அதில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உட்பட 70 தமிழர்கள் பலியாயினர். அச்சம்பவம் மறுநாள் காலை வெளியுலகுக்கு தெரிய வந்தது. 19 நாட்கள் நடந்த மீட்பு பணியில் 66 உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான நான்கு பேரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து அரசு அறிவித்தது.
நிதியுதவி: இறந்தவர்களின் குடும்பத்தில் வாரிசுகளுக்கு கேரள அரசு ரூ.5 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கியது. மத்திய அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிதியுதவி இதுவரை வழங்கவில்லை. அதே போல் தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் வீதம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், அதில் இருந்து மீள இயலாத அளவில் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அச்சம்: பெட்டிமுடி போன்று நிலச்சரிவு அபாயம் மூணாறைச் சுற்றி பல எஸ்டேட் பகுதிகளில் உள்ளதால் மழை பெய்தால் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சம் தொற்றிக் கொள்கிறது. அது போன்ற பகுதிகளை கண்டறிந்து தொழிலாளர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.