ஸ்மிருதி இரானியை விமர்சிக்காதீர்கள்: தொண்டர்களுக்கு ராகுல் அறிவுரை
ஸ்மிருதி இரானியை விமர்சிக்காதீர்கள்: தொண்டர்களுக்கு ராகுல் அறிவுரை
ADDED : ஜூலை 12, 2024 03:34 PM

புதுடில்லி: ‛‛ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவரையும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் அனைவரும் தவிர்க்க வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
2019 ம் ஆண்டு அமேதி தொகுதியில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், ராகுல் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பிறகு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.
அமேதி தொகுதியில் காங்., சார்பில் கிஷோரி லால் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கினார். இத்தேர்தலில் கிஷோரி லால் வெற்றி பெற்றார். இதனையடுத்து ஸ்மிருதி இரானியை காங்., தொண்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் ஏற்படும். ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவரையும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் அனைவரும் தவிர்க்க வேண்டும். மக்களை அவமானப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும் பலவீனத்தின் அடையாளம். வலிமை அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.