கட்சியில் இருந்து மூத்த மகன் நீக்கம் ஒரு தேர்தல் நாடகம்: லாலுவின் மருமகள் குற்றச்சாட்டு
கட்சியில் இருந்து மூத்த மகன் நீக்கம் ஒரு தேர்தல் நாடகம்: லாலுவின் மருமகள் குற்றச்சாட்டு
ADDED : மே 26, 2025 07:17 PM

பாட்னா: கட்சியில் இருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கியது அவர்கள் குடும்பத்தினரால் நடத்தப்படும் தேர்தல் சீசன் நாடகம் என்று பீஹார் முன்னாள் முதல்வர் லாலுவின் மருமகளும் தேஜ் பிரதாபின் மனைவியுமான ஐஸ்வர்யா குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலுவின் மூத்த மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், ஒரு ஊடகப்பதிவில் தனது தோழியை 12 ஆண்டுகளாக காதலிப்பதாகவும் அவருடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தேஜ் பிரதாபை, தவறான நடத்தை காரணமாக கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் நீக்கி விட்டதாக லாலு அறிக்கை வெளியிட்டார்.
தேஜ் பிரதாப்புக்கு ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே, இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஐஸ்வர்யாவின் தாத்தா, பீகார் மாநிலத்தில் ஒரு காலத்தில் முதல்வராக இருந்தவர். அவரது தந்தை சந்திரிகா ராய், பீகார் மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர்.
தேஜ் பிரதாப் - ஐஸ்வர்யா பிரிவு காரணமாக, லாலு- சந்திரிகா ராய் குடும்பத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில், தேஜ் பிரதாப், சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதால், லாலு அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்தில் இருந்தும் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், லாலுவின் மூத்த மருமகள் ஐஸ்வர்யா அளித்த பேட்டி:
அவர்கள் கூட்டுச் சதி செய்கிறார்கள். இது அந்தக் குடும்பத்தினரால் நடத்தப்படும் தேர்தல் சீசன் நாடகம். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல் காரணமாக லாலு இவ்வாறு அறிவித்ததை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர் தவறாக வழி நடத்துகிறார். எனக்கு எதிராக கணவர் மற்றும் மாமியார் நடந்து கொண்டு, என்னை வெளியேற்றி கொடூர பாவத்தை செய்தபோது அவர், மனசாட்சிப்படி நடக்கவில்லை.
இவ்வாறு ஐஸ்வர்யா தெரிவித்தார்.