ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள், இல்லை எனில் தோட்டா பாயும்: பாக்.கிற்கு பிரதமர் எச்சரிக்கை
ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள், இல்லை எனில் தோட்டா பாயும்: பாக்.கிற்கு பிரதமர் எச்சரிக்கை
UPDATED : மே 27, 2025 10:17 AM
ADDED : மே 26, 2025 08:10 PM

பூஜ்; நீங்கள் உங்களின் ரொட்டியை சாப்பிட்டு நிம்மதியாக இருங்கள். இல்லை என்றால் எங்களின் தோட்டா அங்கே இருக்கும் என்று பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். வதோதரா பகுதியில் வாகன பேரணி மேற்கொண்டார்.
தொடர்ந்து பூஜ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மே 9ம் தேதி இரவு பாகிஸ்தான் நம் நாட்டு மக்களை குறி வைத்து தாக்க முயன்றது. அதன் பின்னர், இந்திய ராணுவம் சக்திவாய்ந்த ஒரு இரட்டை பலத்துடன் எதிர் தாக்குதலை நடத்தியது.
வறுமையை ஒழிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும், தீங்கு ஏற்படுத்துவதிலும் குறியாக உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்திய மக்கள் உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடு. பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஒரு பலமான சமிக்ஞை.
பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் 15 நாட்கள் காத்திருந்தோம். அவர்கள் அவ்வாறு செய்யாத போது, ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தேன்.
நமது படைகளின் வீரமும், துணிச்சலும் தான் பாகிஸ்தானை வெள்ளைக் கொடியை அசைக்க வைத்தது. எங்கள் இலக்கு என்பது உங்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தான் என்று ஏற்கனவே அவர்களிடம் கூறி இருந்தோம். இப்போது நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதம் என்னும் நோயில் இருந்து பாகிஸ்தான் மக்களை விடுவிக்க, அங்குள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும்.
நீங்கள்(பாகிஸ்தான்) அமைதியான வாழ்க்கையை விரும்பினால் உங்கள் ரொட்டியை சாப்பிடுங்கள். இல்லை என்றால் எங்கள் தோட்டா எப்போதும் தயாராக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.