ADDED : ஜூன் 24, 2025 12:15 AM
ஷிம்லா, ஜூன் 24--
ஹிமாச்சல பிரதேசத்தில், 24 மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஹிமாச்சலின் சிர்மவுர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர் 24 பேர், தலைமை ஆசிரியரிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், ஆசிரியர் ஒருவர் தங்களை தகாத இடங்களில் தொட்டதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர். இந்த புகாரை, பள்ளியின் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு குழு விசாரித்தது.
இதைத் தொடர்ந்து, புகார் கூறிய மாணவியரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானோருக்கு, இந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்கூட்டியே தகவல் தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.