ADDED : ஜூன் 22, 2025 09:05 PM
புதுடில்லி:ஹரியானாவில் நடந்த கொலை வழக்கில், தேடப்பட்டவரை டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
அண்டை மாநிலமான ஹரியானாவின் சோனிபட் முர்தாலில் உள்ள வீர் தாபாவில், தீபக் என்ற பன்ஜா, பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தாதா ராகேஷ் கடியன் என்ற பம்புவை போலீசார் தேடி வந்தனர். மேலும், ராகேஷ் குறித்து தகவல் தருவோருக்கு, 20,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத துப்பாக்கிகளை சிலர் கடத்திச் செல்வதாக டில்லி மாநகரப் போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
சிறப்புப் படை போலீசார், ரோஹிணியில் ராகேஷ் கடியன் என்ற பம்பு,39,வை கைது செய்தனர். ஹரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த ராகேஷ், தலைநகர் டில்லியிலும் தன் குற்றச் செயல்களை துவங்க முயன்றபோது சிக்கினார். அவரிடம் இருந்து துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராகேஷிடம் விசாரணை நடக்கிறது. ஹரியானா போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.