கோமாவில் உள்ள கணவரின் வங்கி கணக்கில் பணம் எடுக்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி
கோமாவில் உள்ள கணவரின் வங்கி கணக்கில் பணம் எடுக்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி
ADDED : மே 16, 2025 12:55 AM

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ராஜாஜி நகரில் வசிப்பவர் டாக்டர் அனில்குமார். அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இவர், 2024 நவ., 12ல் ஓய்வு பெற்றார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பே, மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டது.
அவரை, பெங்களூரு மருத்துவ மற்றும் ஆய்வகத்தின் நரம்பியல் பிரிவில் சேர்த்தனர். அனில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அபூர்வமான நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டதாக கூறினர். தற்போது அனில்குமார் கோமாவில் இருக்கிறார்.
அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2024, ஜூன் 23 முதல் சிகிச்சையில் உள்ளார்.
அவரது அன்றாட சிகிச்சைக்கும், குடும்ப செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. அனில்குமார் மூன்று வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவர் எழுதவோ, கையெழுத்திடும் நிலையிலோ இல்லை. செலவுக்கு பணம் எடுக்க முடியவில்லை.
எனவே தன் கணவரின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்கவும், நிர்வகிக்கவும் அனுமதி அளிக்கும்படி, மூன்று வங்கிகளிலும், அவரது மனைவி சந்தியா வேண்டுகோள் விடுத்தார்; போதிய ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
அவரது வேண்டுகோளை, வங்கிகள் நிராகரித்தன. இது குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சந்தியா மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ''மனுதாரரின் கணவர் நரம்பு சம்பந்தப்பட்ட அபூர்வமான நோயால் அவதிப்படுகிறார். எனவே, சந்தியா அவரது கணவரின் கார்டியனாக நியமிக்கப்படுகிறார்.
''தன் கணவருக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்து, பணம் எடுக்க வங்கிகள் அனுமதி அளிக்க வேண்டும். இவ்விஷயத்தில், எந்த காரணத்தை கொண்டும் வங்கிகள் தாமதம் காட்டக்கூடாது. இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்,'' என, உத்தரவிட்டார்.