டி.ஆர்.எப்., அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்
டி.ஆர்.எப்., அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்
ADDED : மே 16, 2025 12:34 AM

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப்., எனப்படும், 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்கும்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா வலியுறுத்திஉள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்- - இ- - தொய்பாவின் கிளை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், 'இதற்கு காரணமானோர், நிதி அளிப்போர், ஆதரிப்போருக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்' என, வலியுறுத்தியது.
இருப்பினும், தங்கள் அறிக்கையில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப்., அமைப்பின் பெயரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் டி.ஆர்.எப்., அமைப்பை சேர்க்கும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக, நம் நாட்டின் குழு ஒன்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளை ஏற்கனவே சந்தித்து பேசியிருந்தது.
இந்த நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267ன் கீழ் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவை, நம் நாட்டு பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, பஹல்காம் தாக்குதலில் டி.ஆர்.எப்., பங்கு குறித்து விளக்கினர். அது தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். பின், ஐ.நா., சபையின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலக துணை பொதுச்செயலர் விளாடிமிர் வோரோன்கோவ் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழு நிர்வாக இயக்குநரகத்தின் உதவி பொதுச் செயலர் நடாலியா கெர்மன் ஆகியோரையும் சந்தித்து அவர்கள் பேசினர்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம், 1267 என்பது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம். இந்தத் தீர்மானம் பயங்கரவாதப் பணப்பரிமாற்றம், ஆயுதங்கள் பெறுவதை தடுக்க, குழுவை அமைத்து செயல்படும்.
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து, நிதி மற்றும் ஆயுத உதவிகளை தடுப்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றும். நம் நாட்டு அதிகாரிகள் அளித்த ஆதாரங்கள் ஏற்கப்பட்டால், டி.ஆர்.எப்., அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படும்.