ADDED : ஜூன் 30, 2025 01:31 AM

புதுடில்லி: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துங்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களை தனிநாடாக அறிவிக்கக் கோரி, ஆயுதக் குழுக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில், ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தற்கொலைப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இதில், 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு 'பாகிஸ்தான் தலிபான்' என்று அழைக்கப்படும் 'தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான்' என்ற பயங்கரவாத அமைப்பின் துணைப் பிரிவான 'ஹபீஸ் குல் பகதுார்' என்ற பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையே, அந்நாட்டின் ராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவின் துாண்டுதலின்படி 'காரிஜி' என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை அரங்கேற்றி உள்ளது' என, குறிப்பிட்டுள்ளது.
இதற்கு நம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில், நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், 'பாகிஸ்தானின் வஜீரிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
'இதை, நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்' என, தெரிவித்துள்ளார்.