ADDED : மே 22, 2025 01:10 AM

லண்டன்:பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், 77, எழுதிய புத்தகம், இந்தாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் பானு முஷ்டாக். இவர் எழுத்தாளர் மட்டுமின்றி, வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர், 'ஹசீனா மற்றும் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை, கன்னட மொழியில் எழுதினார்.
இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, 'ஹார்ட் லேம்ப்' என்ற பெயரில் வெளியிட்டார். 12 சிறுகதைகள் அடங்கிய இப்புத்தகம், தென் மாநிலங்களில் ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இன்றைய உலகில் வாழும் மனிதர்களின் குணாதிசயங்களை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இலக்கிய உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் சர்வதேச புக்கர் பரிசுக்கு பானு முஷ்டாகின் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக தேர்வான ஆறு புத்தகங்களில், 'ஹார்ட் லேம்ப்' புத்தகத்திற்கு புக்கர் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, எழுத்தாளர் பானு முஷ்டாக் மற்றும் இப்புத்தக்கத்தை மொழிபெயர்த்த தீபா பாஸ்தி ஆகியோர் மொத்தம் 57.40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை பெற்றனர்.