ADDED : மே 22, 2025 01:12 AM

காந்தி நகர்: குஜராத்தின் ஜுனாகத் மற்றும் கிர் சோம்நாத் மாவட்டங்களில் கிர் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு கடந்த, 2020 ஜூன் மாதம், ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 674 சிங்கங்கள் இருந்தன. இதையடுத்து மாவட்ட வனத்துறை சார்பில், மே 10 முதல் 13 வரை இரு கட்டங்களாக சிங்கங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிங்கங்கள் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக முதல்வர் புபேந்திர பாட்டீல் தெரிவித்தார்.
கணக்கெடுப்பு குறித்து மாநில வனத்துறை அதிகாரி கூறியதாவது:
ரேடியோ காலர்கள், நவீன கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ்., உதவியுடன் புலிகள் நடமாட்டம், பாலினம், வயது, உடலில் உள்ள குறியீடுகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், ஐந்து ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட 217 சிங்கங்கள் அதிகரித்துள்ளன.
தற்போதைய கணக்கெடுப்பில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 225 குட்டிகள் மற்றும் இளம் சிங்கங்கள் 140 இருப்பது தெரியவந்துள்ளது. கிர் தேசிய பூங்கா பகுதியில் 384ம், மற்ற பகுதிகளில் 507 சிங்கங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.