புது முயற்சி! ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்கல்
புது முயற்சி! ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூன் 30, 2025 01:20 AM

ஜம்மு: அரசு நலத்திட்டங்களின் பலன்கள் நேரடியாக பொது மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான குடும்ப அடையாள அட்டையை உருவாக்க, ஜம்மு - காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு, தலைமை செயலர் அடல் டல்லுா தலைமையில் அனைத்து துறை செயலர்கள் அடங்கிய உயர்மட்ட கூட்டம் நடந்தது.
இதில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவமான குடும்ப அடையாள அட்டையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தலைமை செயலர் அடல் டல்லுா பேசுகையில், “குடும்ப அடையாள அட்டையை உருவாக்குவது, பயனாளி சார்ந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் கிடைக்க உதவும். மேலும், தகுதியுள்ள ஒவ்வொருவரும் நலத்திட்டங்களின் நன்மைகளை சரியாக பெறுவதை உறுதிசெய்யும்.
''இந்த முயற்சி மிகவும் பொறுப்புணர்வானது மற்றும் துடிப்பான நிர்வாகத்தை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான படி,” என்றார்.
திட்டமிடல் துறை செயலர் தலத் பர்வேஸ், இந்த திட்டத்தின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார். மேலும், ஜம்மு - காஷ்மீரில் இதுபோன்ற ஒருங்கிணைந்த அமைப்பின் அவசர தேவையையும் அவர் வலியுறுத்தினார்.
தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பியுஷ் சிங்லா, இந்த திட்டத்தின் நோக்கங்களை அடைவதில் தன் துறையின் முக்கிய பங்கை விரிவாக கூறினார். இந்த தொலைநோக்கு பார்வையை, ஜம்மு - காஷ்மீர் முழுதும் வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வர தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாகவும் பியுஷ் சிங்லா குறிப்பிட்டார்.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அரசு திட்டங்கள் மக்களை திறம்பட சென்றடைவதில் உள்ள நிர்வாகத்தின் சவால்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசு நலத்திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவமான குடும்ப அடையாள அட்டையை உருவாக்குவது என, முடிவு செய்யப்பட்டது. இதற்கு, அனைத்து துறை செயலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் உள்ள சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. தற்போது, நலத்திட்டங்களின் பலன்களை பொது மக்களுக்கு வழங்க, ஒரே மாதிரியான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறையை அனைத்து துறைகளும் மேற்கொள்கின்றன.
இது, மக்களுக்கு தேவையின்றி சிரமத்தை ஏற்படுத்துவதோடு அரசு வளங்களையும் பாதிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு, குடும்ப அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இனி இதை பயன்படுத்தியே அரசின் அனைத்து நலத்திட்டங்களின் பலன்களை மக்கள் பெறலாம். இந்த புதிய முயற்சி, நீண்டகால பிரச்னைக்கு ஒரு உறுதியான தீர்வாக இருக்கும். மேலும், தேவைப்படுவோருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
பொது வினியோக முறை மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டங்களின் தரவுகள், குடும்ப அடையாள அட்டை தரவுகளுக்கு பயன்படுத்தப்படும். குடும்ப அடையாள அட்டை வினியோகித்த பின், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.