பா.ஜ., அரசின் அமைச்சர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் ஒதுக்கீடு
பா.ஜ., அரசின் அமைச்சர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் ஒதுக்கீடு
ADDED : மார் 20, 2025 10:34 PM
விக்ரம்நகர்:முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான புதிய அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்குப் பின்னர், பா.ஜ., அமைச்சர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு முடிவுரை எழுதி, ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றது. அவரது அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள் உள்ளனர்.
அமைச்சரவை பதவியேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சபாநாயகர், துணை சபாநாயகர், மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்களை ஒதுக்கீடு செய்து, மாநில அரசின் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துளஅளது.
முதல்வர் ரேகா குப்தாவுக்கு பொருத்தமான தங்குமிடத்திற்கான தேடல் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமைச் செயலகத்திற்கு அருகே முதல்வருக்கு பொருத்தமான வீட்டைத் தேடுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. லுட்யன்ஸ் பகுதியில் சில பங்களாக்கள் காணப்பட்டன. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
முதல்வர் ரேகா குப்தா, தற்போது தன் ஷாலிமார் பாக் இல்லத்தில் தங்கியுள்ளார்.
துணை சபாநாயகர் மோகன் சிங் பிஷ்ட், ராஜ் நிவாஸுக்கு அருகிலுள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், நவராத்திரியின்போது அங்கு குடிபெயர திட்டமிட்டுள்ளார்.
சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு, அவர் ஏற்கனவே வசித்து வரும் லுட்யன்ஸ் திலக் மார்க் பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா, அவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஒதுக்கப்பட்டது.
உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட்டுக்கு, சாணக்யாபுரியிலும் அமைச்சர்கள் கபில் மிஸ்ரா, பங்கஜ் சிங், ரவீந்தர் இந்திரஜ் ஆகியோருக்கு சிவில் லைன்ஸில் உள்ள ஷாம்நாத் மார்க்கில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, எம்.பி.,யாக இருந்தபோது முதல் வசித்து வரும் லுட்யன்ஸ் வின்ட்சர் பிளேஸில் உள்ள பங்களாவையே தேர்ந்தெடுத்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, தனக்கான பங்களாவை இன்னும் தேர்வு செய்யவில்லை.