மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு அடுத்த சிக்கல்: ரூ.1,300 கோடி ஊழல் புகாரில் வழக்குப்பதிய அனுமதி
மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு அடுத்த சிக்கல்: ரூ.1,300 கோடி ஊழல் புகாரில் வழக்குப்பதிய அனுமதி
ADDED : மார் 13, 2025 08:03 PM

புதுடில்லி: டில்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடிக்கு ஊழல் நடந்த புகாரில் முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்து உள்ளார்.
டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, டில்லி அரசு பள்ளிகளில் பொதுப்பணித்துறை மூலம் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குற்றம்சாட்டியது. இது குறித்து விசாரிக்கும்படி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி தலைமைச்செயலாளருக்கு கவர்னர் சக்சேனா உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மணீஷ் சிசோடியா மறுத்தார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் பா.ஜ., தூண்டுதலின்படி எழுப்பப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்து உள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைதான சத்யேந்தர் ஜெயினும், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் அவர்களுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.