ரூ.750 கோடி கடன் வாங்கி மோசடி சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு
ரூ.750 கோடி கடன் வாங்கி மோசடி சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு
ADDED : பிப் 23, 2024 11:34 PM
லக்னோ,: உத்தர பிரதேசத்தில், 750 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., வினய் ஷங்கர் திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
உத்தர பிரதேசத்தில், சாலை கட்டுமானப் பணி மற்றும் சுங்கச் சாவடி பராமரிப்பு பணிகளில் கங்கோத்ரி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
இந்த நிறுவனம், கடந்த 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், பாங்க் ஆப் இந்தியாவின் கீழ் செயல்படும் ஏழு வங்கிகளில், 1,129 கோடி ரூபாய் கடன் பெற்றது. அதில் ஒரு பகுதி மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டது.
இதனால், வங்கிகள் கூட்டமைப்புக்கு, 754 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பணமோசடி வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர், இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கங்கோத்ரி நிறுவனத்தின் முக்கிய பிரமுகரான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-., வினய் ஷங்கர் திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
உ.பி.,யில் லக்னோ, கோரக்பூர் மற்றும் நொய்டா, குஜராத்தில் ஆமதாபாத், ஹரியானாவில் குருகிராம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக கங்கோத்ரி நிறுவனத்தின், 72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத் துறை கடந்த நவம்பரில் பறிமுதல் செய்தது.
கடந்த சட்டசபை தேர்தலில், கோரக்பூரில் உள்ள சில்லுபரை தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினய் ஷங்கர் திவாரி, பின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.