ADDED : மே 16, 2025 12:28 AM
மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் அருகே, வனப்பகுதியில் ரப்பர் மரங்களில் பால் எடுக்க சென்ற தொழிலாளி புலி தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிகாவு பகுதியை சேர்ந்தவர் கபூர், 45. ரப்பர் மரங்களில் பால் எடுக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று இவர் சக தொழிலாளியுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து பாய்ந்து வந்த புலி, திடீரென கபூரை தாக்கி, 200 மீ., தொலைவுக்கு காட்டுக்குள் இழுத்துச் சென்றது.
இதனால் அவருடன் வந்த மற்றொரு தொழிலாளி தப்பியோடினார். புலி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்து வந்த போலீசார், கபூர் உடலை மீட்டனர். அங்கு திரண்டு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்தோம். ஆனால் அவர்கள் புலியை பிடிக்க முயற்சிக்கவில்லை' என, அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, கபூர் குடும்பத்திற்கு இழப்பீடு தருவதாக வனத்துறையினர் அறிவித்ததை தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அவர்கள் அனுமதித்தனர்.