கர்நாடகாவில் 7 அதிகாரி வீடுகளில் கட்டுக்கட்டாக பணம், நகை பறிமுதல்
கர்நாடகாவில் 7 அதிகாரி வீடுகளில் கட்டுக்கட்டாக பணம், நகை பறிமுதல்
ADDED : மே 16, 2025 12:31 AM

பெங்களூரு:கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள், நேற்று அதிகாலையே ஏழு அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான, 40 இடங்களில் சோதனை நடத்தினர். அனைவரின் வீடுகளிலும் கட்டுக்கட்டாக ரொக்கம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின. கர்நாடகாவில், சொத்து குவிப்பு புகார்களில் சிக்கும் அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டத்தின் சர்வே மேற்பார்வையாளர் மஞ்சுநாத், விஜயபுராவின் அம்பேத்கர் மேம்பாட்டு கார்ப்பரேஷன் அதிகாரி ரேணுகா சாதர்லே உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, 40 இடங்களில் நேற்று அதிகாலையே லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் இறங்கினர்.
கலபுரகியின், அக்கமகாதேவி லே - அவுட்டில் உள்ள தாசில்தார் உமாகாந்தின் வீடு, அலுவலகம், பண்ணை வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில், கட்டுக்கட்டாக ரொக்கம், சொத்து ஆவணங்கள் சிக்கின. மேலும் பல அதிகாரிகள் வீடுகளில் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், சொகுசு கார்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் சிக்கின.
'மேலோட்டமாக பார்க்கும் போது, அதிகாரிகள் சட்டவிரோதமாக சொத்துகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது, ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே தெரியும்' என, லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர்.