UPDATED : ஜூன் 19, 2025 10:05 PM
ADDED : ஜூன் 19, 2025 05:05 PM

திருவனந்தபுரம்: '' காங்கிரஸ் கட்சி மேலிடத்துடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை.
' ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றார். அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வருவது காங்கிரசுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர், சசிதரூரை கண்டித்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிலம்பூர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளாதது தொடர்பாக சசி தரூர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது: கேரள மாநிலம் நிலம்பூர் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் என்னை அழைக்கவில்லை. எனக்கும், கட்சி தலைமைக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றை மூடிய கதவுக்குள் சரி செய்து கொள்ள முடியும். ஆனால், இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றதால், வெளிநாடுகளுக்கு சென்றேன். திரும்பி வந்த பிறகு, பிரசாரத்திற்கு வர வேண்டும் என கட்சியினர் யாரும் என்னை அழைக்கவில்லை. கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசில் உள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடனான எனது உறவு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.