ADDED : மே 24, 2025 08:34 PM
புதுடில்லி:மருத்துவமனைகளில் பெண்களையும், பாதுகாப்பு இல்லாத நோயாளிகளையும் குறிவைத்து கொள்ளை அடித்த கும்பலில் ஒருவர், வடக்கு அவென்யூவில் நேற்று கைது செய்யப்பட்டார்.
போலீஸ் துணைக் கமிஷனர் தேவேஷ் குமார் மஹ்லா கூறியதாவது:
மருத்துவமனைகளில் நகைகள் அணிந்துள்ள பெண்கள் மற்றும் உதவியாளர் இல்லாத நோயாளிகளை குறிவைக்கும் கும்பல், அவர்களுக்கு உதவுவது போல நடித்து நகை, பணம், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து வந்தது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசிடம் சிக்காமல் இருக்க ஒவ்வொரிவரிடமும் ஒவ்வொரு பெயரை கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், மோசடி, திருட்டு மற்றும் குற்றச் சதி உட்பட எட்டு வழக்குகளில் தேடப்பட்ட அனில்,30, புதுடில்லி வடக்கு அவென்யூவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்தவர் என்பதை அனில் ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு கோவிந்த்புரி போலீசார் பதிவு செய்த வழக்கில், அனில் மீது ஜாமினில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளிகள் குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.