வாட்டர் டேங்கர் மாபியாவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை? டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வாட்டர் டேங்கர் மாபியாவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை? டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
UPDATED : ஜூன் 12, 2024 02:04 PM
ADDED : ஜூன் 12, 2024 01:49 PM

புதுடில்லி: ‛‛ கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ள டில்லியில், வாட்டர் டேங்கர் மாபியாக்கள் மற்றும் தண்ணீரை வீணடிப்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'' என டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
வரலாறு காணாத கோடைக்கு மத்தியில் தேசிய தலைநகரான டில்லி கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் யமுனை நதி நீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வில், நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா பிவி வரலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: டில்லி குடிநீர் டேங்கர் மாபியாக்கள் இன்னும் செயல்படுகின்றனர். ஆனால், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. டில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டில்லி போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க நாங்கள் உத்தரவிட முடியும். நீதிமன்றத்தின் முன்பு பொய்யான அறிக்கைகளை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் டில்லியில் எங்கு செல்கிறது?
டில்லியில் அதிகளவு வாட்டர் டேங்கர் மாபியாக்கள், தண்ணீர் வீணடிப்பு உள்ளது. இதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை டிவி மூலம் பார்க்கிறோம். கோடையில் தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படும் என்றால், தண்ணீர் விரயத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பா.ஜ., கேள்வி
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.,வின் ஷெசாத் பூனவாலா கூறியதாவது: மதுபானக் கொள்கைக்கு பிறகு, ஆம் ஆத்மியின் குடிநீர் ஊழல் தெரிய வருகிறது. அதனை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தி உள்ளது. டில்லி வாட்டர் டேங்கர் மாபியா மூலம் வினியோகிக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. ஆம் ஆத்மி அரசுக்கு திறமையில்லை. டேங்கர் மாபியாக்களுடன் அவர்களுக்கு உள்ள உறவு என்ன? அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் அவர்கள், மக்களுக்கு அதிக விலைக்கு தண்ணீரை விற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.