அரசு பள்ளிகள் திறப்பு; 2025-26 கல்வி ஆண்டு துவக்கம்
அரசு பள்ளிகள் திறப்பு; 2025-26 கல்வி ஆண்டு துவக்கம்
UPDATED : ஏப் 01, 2025 12:00 AM
ADDED : ஏப் 01, 2025 04:10 PM
புதுச்சேரி:
அரசு பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டு இன்று முதல் துவங்குகியது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகள் தொடக்க நிலை- 236; நடுநிலை-48; உயர்நிலை -125; மேல்நிலை-60 என மொத்தம் 469 பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாநிலத்திற்கு என தனி கல்வி வாரியம் இல்லாததால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாட திட்டமும், மாகியில் கேரள மாநில பாடதிட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசு பள்ளிகள் கடந்த 2023-24 கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 நீங்கலாக பிற வகுப்புகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
கடந்த 2024-25 கல்வி ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இவர்களில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் ஆண்டு பொதுத் தேர்வை எழுதி முடித்துவிட்டு, தேர்வு முடிவுக்கு காத்துக் கொண்டுள்ளனர்.
அதேநேரத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வு கடந்த 23ம் தேதி முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
அதன்படி இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடை வழங்க வேண்டும். ஆனால், என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்கள் பெங்களூருவிலும், தமிழ் பாடப்புத்தகங்கள் தமிழகத்திலும் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று துவங்கும் பள்ளிகள் வரும் 30ம் தேதிவரை இயங்கும். மே 1ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.