UPDATED : ஏப் 01, 2025 12:00 AM
ADDED : ஏப் 01, 2025 04:11 PM
திருப்பூர்:
நடப்பு, 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே 4ம் தேதி நடக்கிறது. பிப்., 7 முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மார்ச், 7ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 395 மாணவ, மாணவியர் நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், இன்று துவங்குகியது.
இது குறித்து, மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
தாராபுரம், மூலனுார், குண்டடம் மற்றும் வெள்ளகோவில் வட்டாரத்தை சேர்ந்தவர்கள், தாராபுரம், என்.சி.பி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம், பொங்கலுார் மற்றும் காங்கயத்தை சேர்ந்தவர்கள், பல்லடம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலத்தை சேர்ந்தவர்கள், உடுமலை, ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி பெறலாம்
இம்மையங்கள், காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான, 30 ஆசிரியர்கள் மூலம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுகள் குறித்த பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் பயிற்சி வகுப்பில் கற்றது தொடர்பாக மாதிரி தேர்வு நடத்தப்படும். இன்று துவங்கும் பயிற்சி வகுப்பு மே, 2ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.