மிசோரத்தில் மலையை குடைந்து 52 கி.மீ.,க்கு ரயில் பாதை: இரு வாரங்களில் பிரதமர் துவக்கி வைக்கிறார்
மிசோரத்தில் மலையை குடைந்து 52 கி.மீ.,க்கு ரயில் பாதை: இரு வாரங்களில் பிரதமர் துவக்கி வைக்கிறார்
ADDED : செப் 01, 2025 02:00 AM

மிசோரம் மாநிலத்தில், சாய்ராங் - பைராபி நகரங்கள் இடையே, 8,071 கோடி ரூபாய் செலவில், புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மலையில், 48 சுரங்கப் பாதைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையை, இரு வாரங்களில் பிரதமர் மோடி, ரயில்களி ன் இயக்கத்திற்கு துவக்கி வைக்க உள்ளார்.
சவாலான பணி நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிசோரம், 80 சதவீதம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது மிகவும் சவாலாக இருந்தது.
இந்நிலையில், இம்மாநிலத்தின் தலைநகர் அருகே உள்ள சாய்ராங் -மற்றும் பைராபி நகரங்கள் இடையே, 51.38 கி.மீ., துாரத்திற்கு, புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்படும் என, 2008ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்பின் நிதி ஒதுக்கப்பட்டு, 2014ல் பணி துவங்கியது. ரம்மியமான மலைகள் நிறைந்த பகுதியில், ரயில் பாதை அமைப்பது மிகவும் சவாலாக இருந்தது. பல முறை நிலச்சரிவை ஊழியர்கள் சந்தித்தனர். மிகவும் சிரமப்பட்டு இந்த ரயில் பாதையை தற்போது உருவாக்கி உள்ளனர்.
நாட்டில் வேறு எந்த ரயில் பாதையிலும் இல்லாத வகையில், இந்த ரயில் பாதையில், 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள், சாலை செல்லும் பகுதியில் ஐந்து மேம்பாலங்கள், ஆறு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் பாதைக்காக குராங் ஆற்றின் மீது, 114 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது.
இது, நாட்டின் இரண்டாவது பெரிய பாலமாகும். ரயில்வே பொறியியல் வரலாற்றில், சவால் நிறைந்த பணியாக மிசோரம் ரயில் பாதை மாறியுள்ளது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த ரயில் பாதையில், ஹோர்டோக்கி, கான்புய், முகல்காங், சாய்ராங் ரயில் நிலையங்கள் அமைந்து உள்ளன. இதன் வாயிலாக மிசோரம் மக்கள் மாநில தலைநகரான ஐஸ்வால் நகருக்கு எளிதாக செல்ல முடியும்.
இதுகுறித்து, வடக்கு கிழக்கு எல்லை ரயில்வே மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி நிலஞ்சன் தேப் கூறியதாவது:
இந்த ரயில் பாதை பணிகள், ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே நடந்தன. பணிகளுக்கான கட்டுமான பொருட்களை, அசாம், ஒடிசா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து, எடுத்து வர வேண்டி இருந்தது.
மிசோரம் மக்கள், இப்பணியில் ஈடுபட விரும்பாததால், பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம் என வெளிமாநிலங்களில் இருந்து, பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. திட்டத்தில் பைராபியிலிருந்து நான்கு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா அவற்றை அங்குள்ள கிராமங்களுடன் இணைக்க சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. ரயில்பாதை திட்டத்தால் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன், அதிகாரி ஓம் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது
மிசோரம் மாநிலத்திலிருந்து கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்காக, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
அதுபோல, தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு, ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர். இந்த புதிய ரயில் பாதையால், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, தென்மாநிலங்களுக்கு நேரடியாக தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -