ரூ.40 கோடி மாம்பழங்கள் மரங்களில் அழுகி வீண்: விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
ரூ.40 கோடி மாம்பழங்கள் மரங்களில் அழுகி வீண்: விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
UPDATED : ஜூன் 27, 2025 06:33 AM
ADDED : ஜூன் 27, 2025 06:25 AM

'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1 லட்சம் டன் எடையுள்ள 40 கோடி ரூபாய் மதிப்பிலான மாங்காய்கள் மரங்களில் பழுத்து அழுகியும், சாலையோரம் வீசப்பட்டும் வீணாகியுள்ளன' என, 'மா' விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
தமிழகம் முழுதும், 1.14 ஹெக்டேர் அளவில், மாங்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில், கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக, 35,000 ஹெக்டேரில், அதாவது 87,500 ஏக்கரிலும், தர்மபுரியில் 18,500 ஹெக்டேரில், அதாவது 46,250 ஏக்கரிலும், 'மா' விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இது, தமிழகத்தின் மொத்த சாகுபடியில் கிட்டத்தட்ட 50 சதவீதம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 40க்கும் மேற்பட்ட மா வகைகள் விளைவிக்கப்பட்ட நிலையில் தற்போது, 20க்கும் மேற்பட்ட வகைகள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன.
இவற்றில் பெங்களூரா வகை, 80 சதவீதத்திற்கும் மேல் சாகுபடி செய்யப்படுகிறது. 80 சதவீதம் மாங்காய்கள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு, அதன் வாயிலாக அந்நிய செலாவணியாக, 700 கோடி ரூபாய் கிடைத்து வந்தது.
கொள்முதலுக்கு மறுப்பு
இந்நிலையில் நடப்பாண்டில், மாங்காய்களை கொள்முதல் செய்ய மாங்கூழ் தொழிற்சாலைகள் மறுத்து வருகின்றன. இதனால், லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மாங்காய் லோடுகளுடன் விவசாயிகள் காத்து இருந்தனர்.
ஆனால், மாங்காய் கிலோ, 4 ரூபாய் என மதிப்பிட்டு, டன்னுக்கு 4,000 ரூபாய் மட்டுமே மாங்கூழ் தொழிற்சாலைகள் வழங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேதனை
இது குறித்து, 'மா' விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், 'கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில், 74 மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கிய நிலையில் தற்போது, 24 மட்டுமே இயங்குகின்றன.
'தர்மபுரி மாவட்டத்தில் ஒரே மாங்கூழ் தொழிற்சாலை மட்டுமே இயங்குகிறது. எங்களுக்கு மாங்காய்களுக்கு உரிய விலை இல்லை. அண்டை மாநிலமான ஆந்திராவிலும் எங்கள் மாங்காய்களை வாங்குவதில்லை. சீசன் முடியவுள்ள நிலையில், அலுவலர்கள் எங்களிடம் பெயரளவுக்கு குறைகளை கேட்டுவிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
ரூ.40 கோடி இழப்பு
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது:
கடந்தாண்டு வறட்சியால், 'மா' விளைச்சல் இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, 2.65 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனக்கூறியும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.
நடப்பாண்டில் நல்ல மழை, விளைச்சல் அதிகமிருந்தும் மாங்காய்களை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யவில்லை. தமிழக 'மா' விவசாயிகள் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 1 லட்சம் டன் எடையுள்ள 40 கோடி ரூபாய் மதிப்பிலான மாங்காய்கள் மரங்களில் பழுத்து அழுகியும், சாலையோரம் வீசப்பட்டும் வீணாகி உள்ளன.
அதாவது மாங்கூழ் நிறுவனங்கள் கூறும் கிலோ 4 ரூபாய் என மதிப்பிடும் போது, 40 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -